தேனாம்பேட்டை காவல் துறையினரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்…
தேனாம்பேட்டை பகுதியில் மிளகாய் பொடி தூவி அமெரிக்க டாலர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த தேனாம்பேட்டை காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். அவரது நண்பர் தமீம் அன்சாரியை வெளிநாடு சென்று எலக்டிரானிக் பொருட்களை வாங்கி வருவதற்காக, தாய்லாந்து நாட்டிற்கு அனுப்ப 17,900 அமெரிக்கா டாலர்களுடன் (இந்திய மதிப்பு சுமார் ரூ.13 லட்சம்) இருவரும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் 24.12.2018 அன்று இரவு 09.30 மணியளவில் தேனாம்பேட்டை, இராணுவ குடியிருப்பு அருகே சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, இரும்பு ராடால் தாக்கி அவர்கள் வைத்திருந்த பணப் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.உடனே ஜாபர் சாதிக் E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, தமீம் அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் மனோகரன், அருண்குமார், கார்த்திக் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்ததை தொடர்ந்து 5 பேரை காவல் குழுவினர் 25.12.2018 அன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரும்பு ராடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேற்படி சம்பவத்தில் திறமையாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த தேனாம்பேட்டை உதவி ஆணையர் திரு.கோவிந்தராஜ், E3 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.எம்.சி.ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் திரு.திருமால், திரு.ரங்கநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமைக் காவலர் பொன்னுவேல் (த.கா.32305) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 26.12.2018 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்..




