Sat. Mar 7th, 2026

“பங்களாவை காலி பன்னுங்க பாஸ்..” – தெளிய விடாமல் அடிக்கும் பா.ஜ.க

கடந்த  2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்திருப்பது எப்படி?’ என பேசியிருந்தார். அன்றைய காலகட்டத்தில், பஞ்சாப் நேசனல் வங்கி உட்பட பல வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டே தப்பி ஓடிய நிரவ்மோடி என்ற குஜராத் வைர வியாபாரியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நேரம் என்பதால் அவ்வாறு கூறியதாக பின்னர் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

நிரவ் மோடி

அப்போது, இது குறித்து குஜராத் எம்.எல்.ஏ. ஒருவர் தொடுத்திருந்த வழக்கில் கடந்த 23.03.2023 அன்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் அவரை விடுவித்ததோடு மேல் முறையீடு செய்ய 1 மாதகால அவகாசமும் வழங்கியது.

ராகுல் காந்தியில் பங்களா வாயில்…

ஆனால், தீர்ப்பு வந்த மறுநாளே (நேற்று- 24.03.2023) மேல் முறையீட்டுக்கு கூட நேரம் தராமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் எம்.பி.பதவியை பறித்தது மத்திய அரசு. பாரதிய ஜனதா அரசின் இந்த செயலானது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் சமூக வளைத்தளங்கள் வாயிலாக கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், ராகுல் குறித்த இந்த விவாதம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

அந்த நோட்டீஸ்…

இந்நிலையில்தான், ராகுல் காந்தி தற்போது குடியிருந்து வரும், ‘நெ.12, துக்ளக் லேன்’ என்ற விலாசத்தில் உள்ள அரசு பங்களாவை 30 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இந்த பங்களாவில் குடியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.