Sat. Mar 7th, 2026

கால் டாக்ஸி ஓட்டுநரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்.

ஆகஸ்ட் 05-2019

சென்னை, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் (35). கால் டாக்சி ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். 100அடி ரோடு MMDA அருகே சென்றபோது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் காரை மடக்கி சவாரிக்கு வருமாறு கூறியதாகவும், அதற்கு தமிழ்செல்வன் இது கால் டாக்சி என்பதும், ஆப் மூலம் புக் செய்தால் மட்டுமே சவாரி வர முடியும். மேலும் தான் வீட்டிற்கு செல்வதால் சவாரி வர முடியாது என தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த இரு இளைஞர்களும் தமிழ்செல்வனை காரின் கதவை திறந்து வெளியில் இழுத்துள்ளனர். பின்னர் தமிழ்செல்வன் காரில் இருந்து இறங்கியதும் காரில் இருந்த அவரின் பர்ஸ் மற்றும் செல்போனை எடுத்து வைத்து கொண்டனர். மேலும் மற்றொரு செல்போன் மூலம் தமிழ்செல்வன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்ததை கண்டதும் இரண்டு நபர்களும் நடுரோட்டில் வைத்து தமிழ்செல்வனை சரமாரியாக தாக்கினார்கள். இதனை அங்கிருந்த வாகன ஓட்டிகள் பார்த்தபடி சென்றனர். ஆனால் யாரும் தடுக்க முன்வரவில்லை தாக்கி விட்டு இரண்டு நபர்களும் தப்பி சென்று விட்டனர்.

தமிழ்செல்வன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் சம்பவம் நடந்த காரின் பின்னால் இருந்த ஒரு காரில் இருந்த நபர் இந்த காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தமிழ் செல்வன் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அரும்பாக்கம் போலீசார் அந்த வீடியோ காட்சிகளில் பதிவான நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-நமது நிருபர்