Sat. Mar 7th, 2026

குடிமகன்களின் தொல்லைக்கு அஞ்சும் பொதுமக்கள் | நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? |

ஆகஸ்ட் 04-2019

பொன்னமராவதியில் காய்கறி மார்க்கெட் மற்றும் வாரச் சந்தை உள்ளது. இந்த சந்தையின் மையப் பகுதியில் மது பானக் கடை வைக்க அனுமதி வழங்கக்கூடாது என வணிகர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டருக்கும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில் பொன்னமராவதி தாலுகா பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் சந்தை கடைகளின் மைய பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட் மற்றும் சந்தைக்கு பொன்னமராவதி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்வதற்காகவும், சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அமைத்து வினியோகம் செய்து வருகின்றனர். அதே போன்று பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்காகவும் வந்து செல்கின்றனர். தற்போது அப்பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைத்தால் அங்கு வரும் பெண்களுக்கும் வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக அமையும்.

மேலும் இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் மேல் நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. தவிர பேரூந்து நிலையத்தின் பின்புறம் இந்த கடை அமைவதால் வெளியூர் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் இக்கடையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள அரசு மதுபான கடையின் அருகே தினமும் சிலர் குடித்து விட்டு நடுரோட்டில் உடம்பில் துணி இல்லாமலும் படுத்துறங்கும் நிலை தொடர்ந்து நடப்பதால்… அந்த வழியாக காய்கறி வாங்க செல்லும் பெண்களும் பொதுமக்களும் மாணவ , மாணவிகளும் கடும் கூச்சத்துடன் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.

திறக்கப்பட உள்ள ஒயின்ஷாப்

ஆகையால் இப்பகுதி வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே அப்பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபானக் கடைக்கு அதிகாரிகள் அனுமதி வழங்க கூடாது என்று காய்கறி மார்க்கெட் மற்றும் சந்தை வணிகர்களும் மற்றும் பொது மக்களும் பெண்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நமது நிருபர்