20 கிலோ கஞ்சா பறிமுதல் | ஒருவர் கைது | ஒருவர் தலைமறைவு |
ஆகஸ்ட் 02-2019
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, கோயம்பேடு ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 2 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலைய நுழைவு வாயிலில்… சந்தேகத்திற்கிடமாக பையுடன் இரண்டு வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

திடீரென்று அவர்கள் அந்த பையை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். உடனடியாக போலீசார் அந்த நபர்களை விரட்டிச் சென்றனர். அதற்குள் அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டனர். பின்னர் அந்த நபர்கள் விட்டுச்சென்ற பையை திறந்து பார்த்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவர… கஞ்சாவை பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஒடிய நபர்களை தேடி வந்த நிலையில்… இன்று அதிகாலையில் கோயம்பேடு நிலையம் அருகே சுற்றித் திருந்த ஒருவரை கோயம்பேடு போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் தஞ்சாவூர் சேர்ந்த விவேகானந்தர் (30) விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி கொண்டு தஞ்சாவூர் செல்வதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
-நமது நிருபர்
