கிண்டியில் ஒடிசா வாலிபர் அடித்து கொலை | நண்பர் தலைமறைவு |
ஜூலை 16-2019
சென்னை, கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில்.. ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத் (30), ரபி மோஜி (45), சந்தோஷ் (44), ஜஸ்வந்த் (36) ஆகியோர் தங்கி தனியார் நிறுவனங்களில் செக்கியூரிட்டி வேலை பார்த்து வந்தனர். ஜெகநாத் ராவத் கடந்த இரண்டு தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு ரபி மோஜி, சந்தோஷ் ஆகியோர் வந்தபோது ஜெகநாத் ராவத் பேசமுடியாத நிலையில் கிடந்தார். அப்போது அறையில் ஜஸ்வந்த் இல்லாததால் அவருக்கு செல்போனில் அழைத்து கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டான். இது பற்றி கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிண்டி போலீசார் வந்து பார்த்தபோது ஜெகநாத் ராவத் இறந்த நிலையில் கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ஜெகநாத்ராவத்தை தாக்கியதால் அவரது எலும்புகள் உடைந்து இருப்பதாக தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ரபி மோஜி, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குடிபோதையில் நடந்த தகராறில் ஜெகநாத் ராவத்தை அடித்துவிட்டு ஜஸ்வந்த் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் ஜஸ்வந்த்தை போலீசார் தேடி வருகின்றனர்…
-நமது நிருபர்
