Mon. May 5th, 2025

சிறுநீரக மையம் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பண மோசடி | இரு நைஜீரியர்கள் கைது |

ஜூலை 2-2019..,

ஈரோட்டில் பிரபல சிறுநீரக மையம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த மையத்தின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பொதுமக்கள் பலரை ஏமாற்றி உள்ளனர், இரண்டு நைஜீரியர்கள்.

ஈரோடு சம்பத் நகர் சாலையில் உள்ளது கல்யாணி கிட்னிகேர் எனப்படும் சிறுநீரக மையம். இந்த மையத்திற்கு அண்மையில் வந்த ஐதராபாத் பெண் ஒருவர், ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.3 கோடி அளிக்கப்படும் என்ற அந்த சிறுநீரக மையத்தின் அறிவிப்பை பார்த்து வந்ததாக கூறினார்.
தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் இரு சிறுநீரகங்களையும் அளிக்க உள்ளதாகவும் இதற்காக 15 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியதாகவும் மருத்துவரிடம் தெரிவித்தார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவரும், நிர்வாகமும்… அப்படி ஒரு விளம்பரம் தாங்கள் எங்கும் அளிக்கவில்லை என அந்த பெண்ணிடம் எடுத்துரைத்து… அதன் விபரீதத்தை உணர்ந்து ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரகங்கள் விற்பனை குறித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த சிறுநீரக மையத்தை தொடர்புகொண்டனர்.

இதையடுத்து சிறுநீரக மையத்தின் போலி முகநூல் பக்கத்தை முடக்கியை போலீசார் மோசடி செய்த நபர்கள் வாட்ஸ் அப் மூலமாக பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பின் மோசடி நபர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்ததில்… சிக்னல் பெங்களூரில் காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று… மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த கோலின் சேண்டி மற்றும் ஒகோவா ஸ்டீபன் ஃபிராங் என்ற இரு குற்றவாளிகளை கைது செய்தனர். கைது செய்த இருவரிடம் இருந்து ஏராளமான வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் ஓரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மோசடியில் ஈடுபட்ட இருவரும் பெங்களூரில் அப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இவ்விருவரும் கல்வி பயில்வதற்கான விசாவில் பெங்களூரில் தங்கி உள்ளனர் என்று தெரிவித்தனர்…

நிருபர் ராம்