தலைமறைவான ரவுடிகள் |கைது செய்த தனிப்படை போலீஸார் |
ஜுலை – 1, 2019
சென்னையில், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய, நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த, பிரபல ரவுடி அம்பேத்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளியான இவர் மீது, எண்ணூரில், தொழில் அதிபர் ஜேம்ஸ் என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட, 6 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் என 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிரபல ரவுடி காதுகுத்து ரவியின் கூட்டாளியான, பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை கொலை செய்ததால், தாதா நாகேந்திரனையும், அவரது கும்பலையும் தீர்த்துக் கட்ட, பாம் சரவணன் திட்டம் தீட்டி வருவதாக… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மூலம் தகவல் கிடைத்தது.

இதை அடுத்து, பாம் சரவணனை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில், தலைமறைவாக இருந்த பாம் சரவணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நாகேந்திரனின் கூட்டாளிகள் எண்ணூர் தனசேகரனுடன் இணைந்து, நீதிமன்றத்தில் வைத்து, பாம் சரவணனை கொலை செய்ய திட்டம் தீட்டி , அம்பேத்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் முயற்சி செய்தனர். அப்போது, அவர் தப்பிவிடவே, புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது சகோதரர் மாரியப்பனை கொலை செய்யும் நோக்கில் சென்றுள்ளனர்.
அங்கே, அவரது கூட்டாளிகள் அதிக அளவில் இருந்ததால், அங்கிருந்து தப்பிச் சென்ற பொழுது ஸ்டீபன், குகன் உள்ளிட்டோர் போலீசாரிடம் சிக்கினர்.
இந்த சம்பவம் முதற்கொண்டு, அம்பேத்தை போலிசார் தேடிவந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையான எண்ணூர் தனசேகர், திருச்சியில் இருந்து அம்பேத்தை தொடர்புக் கொண்டு, பாம் சரவணனை தீர்த்துக் கட்ட வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தையும், பொருட்களையும் பெற்றுக் கொள்ள, அம்பேத்கர் திருச்சி சென்றுள்ளார்.
திருச்சி சென்று திரும்பும் வழியில், புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பல்லாவரத்தில் வைத்து அம்பேத்கர் மற்றும் அவரது கூட்டாளிகளான ஸ்டீபன், குகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு பட்டாகத்திகளை பறிமுதல் செய்த போலிசார், குற்ற வழக்குகள் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நமது நிருபர்
