Sun. Mar 8th, 2026

பள்ளியில் விளையாடிய மாணவி | கீழே விழுந்து திடீரென இறந்தார் |

ஜூன் 30-2019

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், +2 பயின்று வரும் மாணவி… பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடிர் என்று கீழே விழுந்து இறந்துள்ளார்.

பனப்பாக்கத்தை அடுத்த, பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தணிகைவேல். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகள் ராதிகா, பனப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், இரண்டு நாளுக்கு முன்பு பள்ளி நேரத்தில், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவி மயங்கி விழுந்ததும், பள்ளி ஆசிரியர்கள், மாணவியை மீட்டு, அருகில் இருந்த பணப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர் இல்லை என்பதால், பணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம், பாலு செட்டி கிராம சுகாதார நிலையத்திற்கு மாணவியை கொண்டு சென்றபோது… மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி முன்பே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

மாணவி மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக, மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து, அரக்கோணத்தை அடுத்த, அவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் அவர் திடீர் என்று மயக்கம் அடைந்து, கீழே விழுந்து, பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இறந்ததாகக் கூறப்படும் சம்பவம், பெற்றோர் தரப்பில், பெரும் அதிர்ச்சியையும், மாணவியின் மரணம் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பாக, முழுமையான தகவல் கிடைக்காததால், பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து, பணப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில், மருத்துவர் இருந்திருந்தால், மாணவியை காப்பாற்ற முடிந்திருக்கும் என பெற்றோர் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து, பணப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகிய போது, அவர் பணி மாறுதலுக்காக வேலூர் சென்று இருந்ததாகவும், மாணவியை பள்ளியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்த நிலையில், அவரை சோதித்த செவிலியர்கள், இறந்து விட்டதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக மருத்துவர் கூறியுள்ளார்.

பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2017 ஆம் ஆண்டு, 4 மாணவிகள் பள்ளி அருகில் உள்ள, கிராமத்துக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும், இதே பள்ளியில் மாணவி இறந்திருப்பது, அனைத்து தரப்பு மக்களிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 4 மாணவிகளின் இறப்பு குறித்து, காவல்துறை தரப்பில், உரிய விசாரணை நடத்தப்பட்டு, எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என, உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்..

நமது நிருபர்