Sun. Mar 8th, 2026

டாஸ்மாக் காவலாளியை | அடித்துக் கொலை செய்த மூவர் கைது |

ஜூன் 25-2019

டாஸ்மாக் கடையில், மது பாட்டில்களை திருடும் போது, காவலாளி தடுத்ததால்… காவலாளியை தாக்கி கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் தப்பி ஓடிய சம்பவம்… லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி, லால்குடியை அடுத்த பூவாளூர் கிராமத்தின், சிறுகனூர் சாலையில், ராஜா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் இரவு நேரக் காவலாளியாக பெருமாநல்லூர் வடக்கு புதுத் தெருவைச் சேர்ந்த பாலையா பணியாற்றி வந்தார். பணியில் இருந்த பாலையா, கடந்த 20 ஆம் தேதி காலை, தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்தக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். அதை அவ்வழியாகச் சென்ற பாதசாரிகள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்… நடத்திய விசாரணையில், `பாலையா டாஸ்மாக் கடையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலியாகப் பணியாற்றி வந்ததாகவும், கடையின் மேற்பார்வையாளரான கண்ணன் உள்ளிட்ட டாஸ்மாக் பணியாளர்கள், சம்பவத்தின் முதல் நாள் இரவு 12 மணி வரை கணக்கு பார்த்து விட்டு வீடுகளுக்குச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலையா, வழக்கம்போல் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்துள்ளார்.அதன் பிறகே கொலை சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார்… குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு லால்குடி டி.எஸ்.பி ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதன் விளைவாக, சிறுகனூரை அடுத்த நெடுங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார், சௌந்தரராஜன் மற்றும் சந்துரு ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் மூவரும் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றதைத் தடுத்ததால் காவலாளியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்கள் இதற்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

குற்றவாளிகள் மூவரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்க மூன்று பேரும் சின்னச் சின்ன திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்தோம். அதில் கிடைக்கும் பணத்தில் நாங்கள் மது வாங்கிக் குடித்து வந்தோம். நாங்கள் திருடும் பணத்தில் அதிகமாகச் சரக்குக்கே செலவானதால், இனி டாஸ்மாக் கடைகளை குறிவைத்துத் திருடினால் நமக்குச் சிக்கல் இருக்காது என முடிவு செய்தோம்.

அதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பப்பாளி பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையில் 60,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்தோம். அந்த மது பாட்டில்களை தச்சன்குறிச்சி வனப்பகுதியில் மறைத்து வைத்துக் குடித்து வந்தோம். அந்தச் சரக்கு முழுவதும் தீர்ந்துவிட்டதால், அடுத்து டாஸ்மாக் கடையைத் தேடி அலைந்தோம். அந்த வகையில் கடந்த 19 ஆம் தேதி இரவு… திருப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தோம்.

அப்போது சத்தம் கேட்டுக் கண்விழித்த காவலாளி எங்களைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இரும்புக் கம்பியால் அவரின் தலையில் தாக்கினோம். நாங்கள் தாக்கியதில் படுகாயமடைந்த காவலாளி, சம்பவ இடத்திலேயே இறந்தார். அதையடுத்து, நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றோம்” என்றனர்.

கைதான மூவரும், 21 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும், இவர்கள் போதைக்கு அடிமையானதால், டாஸ்மாக் கடைகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும், தடுக்க வந்த காவலாளியை கொலை செய்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர்கள்
ராம் – கோகுலன்