வீடு புகுந்து திருடும் ராஜஸ்தான் மாநில திருடன் துப்பாக்கியுடன் கைது.

சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் முத்துசாமி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இணை ஆணையரின் சிறப்புப்படை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்..
அப்போது அவ்வழியாக வந்த வடமாநில டிப்டாப் இளைஞர் ஒருவரை போலீஸார் சந்தேகப்பட்டு அருகில் அழைத்து விசாரித்தனர். அவர் போலீஸாரைக் கண்டதும் ஓட ஆரம்பித்துள்ளார்.
உடனடியாக போலீஸார் அவரைத் துரத்த அவர் கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் குதித்து ஓடியுள்ளார். போலீஸார் விடாமல் துரத்திச் சென்று பிடித்தனர். அவர் தோளில் மாட்டியிருந்த பையைக் கழற்றி சோதனையிட்டுள்ளனர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தோல் பையில் பிஸ்டல் ஒன்று இருந்தது.
இதைப் பார்த்த போலீஸார் அவர் யார் எங்கு தங்கியுள்ளார் என விசாரித்துள்ளனர். யானைக்கவுனியில் ஸ்கூல் பை, தோல் பைகள் தயாரிக்கும் கடை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்டவர் பெயர் நரேஷ் என்ற நசேஷ் சிங் (39) என்பதும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை வந்துவிட்ட நசேஷ் சிங் சென்னையில் ஸ்கூல், டிராவல் பேக்குகள் மொத்தமாக தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து ராஜஸ்தான் பாலியில் உள்ள தங்கள் ஊரைச்சேர்ந்த இளைஞர்களை சென்னை வரவழைத்து அவர்களைத் தங்கவைத்து வீடுகளில் புகுந்து திருடும் தொழிலை செய்து வந்துள்ளார். பகலில் ஆளில்லாத வீடுகளை நசேஷ் சிங் நோட்டமிட்டு தன் ஆட்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டு அவர் வேலையைப் பார்ப்பார்.
திருடும் இளைஞர்கள் கச்சிதமாக காரியத்தை முடித்துவிட்டு கிடைத்ததை பங்கு போட்டுக் கொள்வார்கள். இவ்வாறு செய்வதில் அதிக வருமானமும் ரிஸ்க் குறைவாகவும் இருந்ததால் தீவிரமாக அதில் இறங்கியுள்ளார். இவர்கள் தொடர்ச்சியாக யானைக்கவுனி, ஏழுகிணறு, பூக்கடை பகுதியில் தொடர் திருட்டை நடத்தியுள்ளனர்.
திருட்டு நடந்த நேரத்தில் போலீஸார் துப்பறிந்து திருடர்களைப் பிடித்துள்ளனர். ஆனால், பிடிபட்டவர்கள் கூட்டத்தலைவன் நசேஷ் சிங் பெயரைச் சொல்லாததால் அவர் தொடர்ந்து தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ராஜேஷ் என்பவர் நிறுவனத்திலிருந்து 50 கிலோ வெள்ளியும், ஜெயந்தி என்பவர் வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கப் பணமும், நகைப்பட்டறை ஒன்றிலிருந்து 25 சவரன் நகையையும் திருடியுள்ளதாக நசேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிஸ்டலை வாங்கியுள்ள நசேஷ் சிங் கூட்டாளிகளை வைத்து தொடர் திருட்டை நடத்தும் அதே வேளையில் வருமானம் அதிகரித்ததால் தான் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி சொந்தமாக பேக் தயாரிக்கும் கடையை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார்.
நசேஷ் சிங் கொடுத்த தகவலின் பேரில் யானைக்கவுனி வரதய்யன் தெருவில் வசிக்கும் கீடா பட் (33) என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது பிடிபட்டுள்ள நரேஷ் என்ற நசேஷ் சிங் துப்பாக்கியை எங்கிருந்து வாங்கினார், நசேஷ் சிங்குக்கும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள நெட்வர்க் என்ன என்பது குறித்து தீவிரமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நசேஷ் சிங்கையும்,
கீடா பட்டையும் கைது செய்துள்ள போலீஸார் அவர்கள் மீது பிரிவு 457, 380-வீடு புகுந்து திருடுதல் குறித்த சட்டம்-கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளி மாநிலக் குற்றவாளிகளை கண்டறியும் தொழில்நுட்பத்தை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது…
