Wed. May 7th, 2025

சமையல் சரியில்லை… கணவன் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

சென்னை, எம்ஜிஆர் நகரில் சமையல் சரியில்லை என்று கணவன் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரையடுத்த நெசப்பாக்கம், வெங்கட்ராமன் சாலையை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (29) . 

அபிமன்யு நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு பார்வதி உணவு சாப்பிட பரிமாறினார். அப்போது சமையல் சரி இல்லை என்று அபிமன்யு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த பார்வதி அருகில் கேனில் வைக்கப்பட்டிருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி திடீரென தீ வைத்துக் கொண்டார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். பார்வதி தீயில் கருகுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.