Sat. May 3rd, 2025

இன்று, ‘உலக தண்ணீர் தினம்’ – இதையெல்லாம் செய்ய மறந்துடாதீங்க!

இன்று, உலக தண்ணீர் தினம்..!

– அப்படீனா என்னங்க?  நாம குடிக்க, குளிக்க, சுத்தம் செய்ய இப்படீனு எதுக்கெடுத்தாலும் தண்ணீரை பயன்படுத்துறோம் இல்லையா? ஆனா, தேவைக்கு அதிகமா பயன்படுத்துறதாலயும், தேவையே இல்லாம அதை வீணடிக்கிறதாலயும் ஒருபக்கம் தண்ணீரோட தேவை அதிகமாகிட்டே போகுது. இன்னொரு பக்கம்,  தண்ணீர் கிடைக்கிறதும் அரிதாகிட்டே போகுது. இதுவொரு உலகப் பிரச்சனையா இருக்கிறதால அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு யோசிச்ச ஐ.நா.சபை அதிகாரிகள் கடந்த 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஒரு விசயம்தான் ‘உலக தண்ணீர் தினம்’.

இந்த ஐடியாவானது 1993 ஆம் ஆண்டு பேசப்பட்டாலும்,  எல்லா நாடுகளும் நடைமுறைப்படுத்த துவங்கியது 2005-இல் இருந்துதான். அதன்படி, ஒவ்வொரு வருசமும் மார்ச் மாசம் 22 தேதியன்னைக்கி இந்த உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுது. நம்ம இந்தியாவை பொறுத்தவரை, ‘ஜல்சக்தி இயக்கம்’ என்று சொல்லப்படுகிற ஒன்றிய அமைச்சகத்தின் அறிவுறைப்படி இந்த ஆண்டின் கருப்பொருளாக அதாவது, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விவாதிக்கவும், அதை செயல்படுத்தவும் வேண்டிய விசயமாக, ‘குடிநீருக்கான ஆதாரத்தினை நிலைப்படுத்துதல்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழகமெங்கும் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று நடைபெறவிருக்கும் கிராமசபை கூட்டத்தின் போது ஒவ்வொருவரும் தண்ணீரை பாதுகாத்தல், அதன் பயன்பாட்டினை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் மழைநீரினை சேமித்தல் குறித்த விழிப்புணர்வோடு கலந்துக்கணும்.

“அதெப்படீங்க, தேவைக்கு செலவு பன்னித்தானே ஆகனும்?” அப்படீனு கேக்குறீங்களா..? 

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் குடிக்க மட்டும் 3 லிட்டர் தண்ணீரும் மற்ற தேவைகளுக்காக சுமார் 150 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுது. நம்மோட ஒருநாள் உண்ணக்கூடிய உணவை உற்பத்தி செய்ய மட்டும் சுமார் 3,500 – 4,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுறதா கணக்கெடுத்திருக்காங்க. அப்படியிருக்கும் போது தினமும் காலையில் பல் துலக்குறப்போ, தண்ணீர் குழாயை திறந்தே விட்டுறாம தேவைக்கு மட்டும் பயன்படுத்தி மூடிட்டா மட்டுமே டெய்லி சுமார் 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியுங்க. அதேபோல, எப்பல்லாம் மழை வருதோ அப்பல்லாம் அதை சேமித்து வைக்க நம்ம வீட்டில் ஒரு ஏற்பாட்டையும் செஞ்சுட்டா போதுங்க.

இந்த நேரத்துல நாம இன்னொரு விசயத்தையும் தெரிஞ்சுக்கனும். ‘மறை நீர்’ அப்படீங்கிற வார்த்தையை நீங்க எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதாங்க, நாம சாப்பிடுகிற சாப்பாட்டை மட்டுமல்ல, பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருளையும் தயாரிக்க குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவைப்படும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, ஒருகிலோ அரிசிக்குறிய நெல்லை உற்பத்தி செய்ய 2,500 – 3000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவது மாதிரி, ஃபேக்டரியில தயாரிக்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் தண்ணீர் தேவைப்படும். அதன்படி பார்த்தால்,  நூற்பாலைகளில் இருந்து நூல் தயாரித்து, அதை கலரூட்டி, நெய்து ஆடையாக்குவது வரை தண்ணீர் இன்றி எதுவும் நடக்காது. அதன்படி, நீங்க போடுற ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கவே 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதைத்தான் மறைந்திருக்கும் நீர் – அதாவது, ‘மறை நீர்’ அப்படீனு சொல்லுவோம். இதுதான் காருக்கும், பைக்குக்கும் பொருந்தும்!

ஒருபக்கம் நம்மோட தேவைகளையும் அதிகரிச்சுக்கிட்டு மறுபக்கம் பொறுப்பில்லாம தண்ணீரை வேஸ்ட் பன்னினா நல்லாவா இருக்கும்? இது மாதிரி விழிப்புணர்வு குறித்து பேசவும் அதைக் கடைபிடிக்கவும் தாங்க இந்த உலக தண்ணீர் தினம்.

           அந்த அக்கறை நமக்கு இல்லையினா,  பத்து வருசத்துக்கு முன்னாடி தான் எழுதின ‘மூன்றாம் உலகப்போர்’ புத்தகத்தில் கவிஞர் வைரமுத்து சொன்ன மாதிரி தண்ணீருக்காகவே உலகப்போர் வந்தாலும் வரலாமுங்க..!