Fri. May 2nd, 2025

முதல்வர் வீடு அருகே தொடர் திருட்டு | E4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் பஞ்சாய்த்து |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு அருகே தொடர்ந்து திருட்டு நடக்கிறது. நள்ளிரவில் முதல்வர் வீட்டுக்கு அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்கள் சேதப்படுத்தப்படுகிறது. முதல்வர் வீட்டுக்கு அருகே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை சென்னையில் ஏற்பட்டுள்ளது..

முதல்வர் வீடு இருக்கும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு பணியாற்றும் அதிகாரிகள் கட்ட பஞ்சாய்த்து நடத்துவதால், திருடர்கள், சமூக விரோதிகள் பயமில்லாமல் நடமாடுகிறார்கள். சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் அருகே ஆட்டோ ஸ்டான்ட் உள்ளது அங்கு கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 11 ஆட்டோக்களில் 9 ஆட்டோகளை சேதப்படுத்தி அதிலிருந்த பணம் செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்ம நபர்களால் திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை சி.எஸ்.ஆர். கூட வழங்கவில்லை என்பதுதான் வேடிக்கை. மேலும் இதுசம்பந்தமாக நாளிதழில் செய்தி வெளியில் வந்தால் பொருட்களை மீட்டு தரமாட்டேன் என்றும் இன்று நாளை என தினமும் அலைக்கழித்து வருவதும் இல்லாமல் திருடியவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த புகார் தொடர்பாக வெளியில் சொல்லாமல் அமைதியாக சென்று விடுங்கள் என்று மறைமுக எச்சரிக்கையினை குற்றப்பிரிவு காவலர்கள் பிரதீப் மற்றும் அன்பு (எ) அன்பழகன் விடுத்துள்ளனர். இதைக்கண்டு புகார் அளித்தவர்கள் அதிர்ந்து போனார்கள். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் செல் போன் கடை ஒன்றில் பல ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன்கள் திருடும் போய் உள்ளது. முதல்வர் வசிக்கும் பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களை பிடிக்காமல் புகார் அளிக்க வருபவர்களை மிரட்டுவது அபிராமபுரம் காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக அங்குள்ள காவலர்களின் புலம்பல்கள் இதோ.. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய இணைபிரியாத காவலர்கள் அன்பழகன், பிரதீப், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் அவர்களை அப்போது கோட்டூர்புரம் ஆய்வாளராக இருந்த தன்ராஜ் கடவுச் சீட்டு பதிவு செய்து இடமாற்றம் செய்யப்பட்டனர்…

பின்பு அவர்கள் ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய குற்றப் பிரிவில் பணியாற்றி மீண்டும் இணை பிரியாமல் அபிராமபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவுக்கு மாறுதல் வாங்கி வந்தனர். இவர்களது ஒரே பணி மற்ற காவல் அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை காவலர்கள் வரை தங்களுக்கு வேண்டிய நபர்களை வைத்து மொட்டை பெட்டிசன் போடும் தொழிலை ஜரூராக நடத்தி வருவதாகவும். குற்றவாளிகளை பிடித்து வருகிறார்களோ? இல்லையோ? பிடிக்காதவர்கள் மீது பெட்டிசன் போடுவதில் மகாகில்லாடி என காவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவல் எல்லை பகுதியில் பள்ளம் தோண்டும் இடங்களில் தவறாமல் வசூல் வேட்டை நடத்தி வருவது இவர்களது ஸ்பேஷல் டூட்டி எனவும் நேர்மையான காவல்துறையினர் முணு, முணுக்கிறார்கள்.

இந் நிலை தொடர்ந்தால், முதல்வர் வீட்டில் இருக்கும் பாதுகாப்பு வாகனமே காணாமல் போகுவதற்கு முன்பு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

நிருபர் வெ.ராம்