Mon. May 5th, 2025

திருச்சியில் சங்க கால விநாயகர் உருவ நாணயக் கண்காட்சி.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி முதன்முறையாக திருச்சியில் நடைபெற்றது.

கண்காட்சியில் சங்ககாலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்த விநாயகர் உருவம் பொறித்த காசுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விநாயகர் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவை காசுகளின் தொன்மையையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும், பொருளாதாரத்தையும், சமயத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. விநாயகர் உருவத்தில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், நர்த்தன விநாயகர், ஐந்து கரம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு வாகனத்துடன் கூடிய விநாயகர், நாகபாரணம் அணிந்த விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், நின்றநிலை விநாயகர் என காசுகளில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மதுரை நாயக்கர், செஞ்சி நாயக்கர், வேணாடு சேரர், ரகுநாத நாயக்கர், செவ்வப்ப நாயக்கர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட ஆட்சிகாலத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன் பொறித்த காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளது.

அதில் விநாயகர் உருவம் பொறித்த காசுகளை காட்சிப்படுத்தியது நாணயவியல் ஆர்வலர்களிடமும், பார்வையாளர்களிடமும் பரவசத்தை ஏற்படுத்தியது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நாணயவியல் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் கணபதி காசுகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998 ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது. பணத்தாள் முன்பக்கம் விநாயகரும், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான தேவேந்திரா படமும், பின்பக்கத்தில் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயிலும் படமும் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பத்துப்பாட் மதிப்புள்ள நாணயத்தில் விநாயகர் இடம் பெற்றுள்ளது.

ஒரு டாலர் துவாலு நாட்டின் நாணயம் ஆஸ்திரேலியா அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

செயளர் குணசேகர், பொருளாளர் அஜிஸ், திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சார்லஸ், திருச்சிராப்பள்ளி தபால்தலை சேகரிப்பு கிளப் நிறுவனர் நாசர், ஹாபீஸ் அமைப்பின் நிறுவனர் மதன், கமலக்கண்ணன், சந்திரசேகரன், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.