லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கிய இரண்டு அதிகாரிகள் கைது.
ஆகஸ்ட் 01-2019
ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரை கைது செய்தனர். புதிய திட்டத்திற்காக யுவராஜ் என்பவரிடம் 2 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உள்ளூர் திட்டக் குழும உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் நில அளவையாளர் மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில்…
ஈரோடு மொய்தீன் வீதியை சேர்ந்த யுவராஜ், ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் அருகில் உள்ளது. இந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய யுவராஜ் முடிவு செய்தபோது… இதற்காக அங்கீகாரம் பெற ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோட்டில் உள்ள வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தில் உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜ் விண்ணப்பித்து இருந்தார். அந்த நிலத்துக்கு அங்கீகாரம் வழங்க ஈரோடு உள்ளூர் திட்டக் குழும உதவி இயக்குனர் இளங்கோ வரைவாளர் சதீஸ் ஆகியோர் மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர். அதற்கு யுவராஜ் பணத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். இறுதியாக ரூபாய் 2 லட்சம் கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறிய
ஆலோசனையின்படி ரசாயனப்பொடி தடவிய 2 லட்ச ரூபாய் நோட்டுகளை யுவராஜ் திட்டக் குழுமத்தில் அலுவலகத்துக்கு சென்ற போது… உதவி இயக்குனர் இளங்கோ, நில அளவையாளர் மூர்த்தி மட்டுமே இருந்தனர். வரைவாளர் சதீஷ் என்பவர் மட்டும் விடுமுறையில் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இளங்கோ, மூர்த்தியிடம் யுவராஜ் ரூபாய் இரண்டு லட்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் மட்டும் ஆய்வாளர் நடராஜ் ஆகியோர் உதவி இயக்குனர் இளங்கோ, நில அளவையாளர் மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தி… அவர்கள் லஞ்சமாக வாங்கிய 2 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
-நிருபர் சண்முகசுந்தரம்
