Sat. Mar 7th, 2026

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது.

ஜூலை 28-2019

சென்னை, எம்ஜிஆர் நகர் சுந்தர்ராஜன் தெருவில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது 15 வயது மகள் சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது மகள் வயிற்றில் இருக்கும் போது இளம் பெண்ணை விட்டு அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் (49) என்பவர் பெண்ணுக்கு நண்பராக அறிமுகமானார். மனைவியை பிரிந்து மகனுடன் தனிமையில் வாழந்து வந்த பாலசுப்பிரமணியன் இருவரும் வளசரவாக்கம் ஆறுமுக நாவலர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் சேர்ந்து வாழந்து வந்தனர். கடந்த சில நாட்களாக அந்த பெண்மணி வேலைக்கு சென்ற பின்னர் அவரது மகளிடம் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து தகாத முறையில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து தாயிடம் அவரது மகள் அழுது கொண்டே தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணுக்கும் பாலசுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறி தனது மகளுடன் எம்ஜிஆர் நகர் பகுதிக்கு வந்து குடியேறி விட்டார். மேலும் இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினரிடம் புகார் தெரிவித்தார். பின்னர்  வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அந்த மாணவியிடம் தவறாக நடந்த பாலசுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

-நமது நிருபர்