IRCTC கணக்கில் ரயில் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றவர் கைது.
ஜூலை 28-2019
சென்னை, பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் ரயில் டிக்கெட் புக்கிங் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருபவர் முகமது பைசல் (40). இவர் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார்.
ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இது போன்ற ஏஜென்சி உதவியுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். ஐ.ஆர்.டி.சி யின் இணைய தள முகவரியில் தான் ஏஜென்சிகள் முன்பதிவு செய்வார்கள். ஆனால் முகமது பைசல் அவ்வாறு செய்யாமல் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். இதுகுறித்து பரங்கிமலை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்ததால் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரேந்திரகுமார், SI தனபால் ஆகியோர் பல்லாவரத்தில் உள்ள முகமது பைசல் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டபோது… போலி இமெயில் முகவரி மூலம் முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து ஐஆர்சிடிசி.க்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக ரயில்வே போலீசார் முகமது பைசலை கையும் களவுமாக கைது செய்து… வழக்கு பதிவு செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 20 ஆயிரம் மதிப்புள்ள தட்கால் டிக்கெட்டுகள், சாப்ட்வேர், பிரிண்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
-நமது நிருபர்
