Sat. Mar 7th, 2026

ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் | 50 ஆயிரம் ரூபாய் அபராதம் |

ஜூலை 24-2019

கோயம்பேடு மார்கெட்டில் தானிய மற்றும் உணவு கிடங்கு பகுதியில் 4 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல், 50 ஆயிரம் ரூபாய் அபராதம்…

தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில்… அரசு அதிகாரிகள் சிறிய கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து வரும் நிலையில்… கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து.. அவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் தானிய மற்றும் உணவு கிடங்கு பகுதியில் இயங்கி வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது… அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கடையில் இருந்து மட்டும் சுமார் ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், ஸ்பூன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் கூறுகையில் :-

கோயம்பேடு மார்க்கெட் உட்பட்ட காய்கறி, பழங்கள், பூ மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், கடைகளில் மட்டும் அல்ல மொத்தமாக பொருட்களை வாங்கி செல்பவர்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் சென்றால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திடீரென்று நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கடையில் இருந்து மட்டும் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் சிக்கும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

-நமது நிருபர்