மருத்துவர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை.
ஜூலை 1-2019
பெரம்பூர், ஐசிஎப் பகுதியில், பூட்டியிருந்த மருத்துவரின் வீட்டில்…. 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர், ரயில்வே மருத்துவமனையில்… மருத்துவராக பணிபுரிந்து வருபவர் குமார். இவரது மகன் கனீஷ்க், நீட் தேர்வு எழுதிய நிலையில், மருத்துவச் சேர்க்கைக்காக, கடந்த 27 ம் தேதி, மகனை அழைத்துக் கொண்டு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு சென்றுள்ளார்.

குமார், வீட்டைப் பூட்டி விட்டு, சாவியை வீட்டு வேலை செய்து வரும், சந்தோஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். மேலும், படுக்கை அறை சாவியை மட்டும், குமார் பூட்டி எடுத்துச் சென்றுள்ளார்.
சந்தோஷ்,தினமும் காலை வேளையில் மட்டும் வீட்டை சுத்தம் செய்து விட்டு, மீண்டும் பூட்டி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இன்று, காலை வீட்டை திறந்து பார்த்தபோது, படுக்கை அறை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், உடனே, ஒடிசாவில் இருக்கும், குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
குமார் உடனே, ஐ.சி.எப் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும்,கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். விசாரணையில், பீரோவை உடைத்த கொள்ளையர்கள்,70 சவரன் தங்க நகையையும், பணத்தையும், கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில், விசாரணை மேற்கொண்ட ஐசிஎப் மற்றும் ரெயில்வே போலிசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மகனின் மருத்துவ படிப்பிற்காக, வெளி மாநிலம் சென்ற, மருத்துவரின் வீட்டில், 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஐசிஎப் பகுதியில்,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர்
