Sat. Mar 7th, 2026

மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் | கொசுக் கடியால் பச்சிளம் குழந்தைகள் அவதி |

ஜூன் 30-2019

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால்… கொசுக் கடியால் பச்சிளம் குழந்தைகள் அவதி.!

                                                                     புதுக்கோட்டை - ஜீன்,28, 2019

டிரான்ஸ்பார்மரை மாற்றாத மின் வாரிய ஊழியர்களால், அரசு மகப்பேறு மருத்துவமணையில், கொசுக் கடியால்,பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம். மாநில சுகாதாரத் துறையின் செயல்பாட்டை கேள்விக் கேட்பதாகவும், மின் வாரியத்தின் அலட்சியப் போக்கை கண்டிப்பதாகவும் தாய்மார்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின், வடக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது, ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. மாவட்டத்தின் கிராம பகுதிகளில் இருந்து, பிரசவத்திற்காக தாய்மார்கள் இந்த மருத்துவமனைக்கு தான் பெருமளவு வருகிறார்கள்.

தினந்தோறும்… ஏராளமான கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவத்திற்கான சிகிச்சைகள், வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும் இந்நிலையில், இன்று மாலை 6 மணி அளவில், மருத்துவமனை பகுதியில் மின்தடை துவங்கியது. நேற்று இரவு 10 மணி வரை, மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்ததால் மருத்துவமனையை இருள் சூழ்ந்தது. மேலும் கொசுக்கடியால் பிறந்த குழந்தைகள் பெரும் அவதிப்பட்டனர்.

இதனால், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வெளியிலுள்ள போர்டிகோவில் வந்து அமர்ந்து…. கை விசிறியால், கொசுக்களை விரட்டி கொண்டிருந்தனர். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, பலமுறை தகவல் கொடுத்தும், முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை, சுமார் நான்கு மணி நேரம் பெரும் அவதிக்குள்ளாயினர்.

கொசுக்கடிக்கு உள்ளான பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களும், பிற நோயாளிகளும், மின் வாரியத்தின்… இந்த அலட்சியப் போக்கை கடுமையாக சாடினர். இந்தியாவில், முதல் இடத்தில் இருந்து வந்த தமிழக சுகாதாரத்துறை, தற்போது, ஒன்பதாவது இடத்திற்கு பிந்தங்கியுள்ளதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், மருத்துவமனையில், இது போன்ற பிரச்சனைகள் நடைபெறுவது சுகாதாரத் துறையை, மேலும், பின்னடையச் செய்யும் காரணிகளாகவே அமையக் கூடும் என்று, சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில், பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்க்கு பதிலாக, புதிய டிரான்ஸ்பார்மர் கொண்டுவரப்பட்ட நிலையில், அதை பொருத்தாமல், மின் வாரிய ஊழியர்கள் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்