Sat. Mar 7th, 2026

மாம்பழம் விற்பனையில் பெண்ணை அடித்துக் கொலை | உறவினர் நாடகம் |

ஜூன் 26-2019..,

மாம்பழம் விற்ற தகராறில், உறவுக்காரப் பெண்ணை, இரும்பால் தாக்கி கொலை செய்து விட்டு, நகைப் பறிப்பில் கொலை செய்யப்பட்டதாக வழக்கை திசை திருப்பி, நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம், பட்டீஸ்வரத்தை அடுத்த, மேலக்கரையில் வசித்து வருபவர் வசந்தி(34). இவர் கடந்த 17 ஆம் தேதி இரவு அவரது வீட்டில்… முகத்தில் பலத்த காயங்களுடன், இரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்துள்ளார். இதையடுத்து, வசந்தியின் மகள் சந்தியா(14), பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் கொலை சம்பவம் குறித்து அளித்த புகாரில், வசந்தியிடம் இருந்து நகையை பறித்து, கொலை செய்து விட்டதாக தெரிவிக்கப்ட்டிருந்தது.

இந்நிலையில், பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் எஸ்.பி.மகேஸ்வரன்,
சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்வையிட்ட பின், டி.எஸ்.பி.ஜெயசந்திரன் தலைமையில், தனிப்படை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

தனிப்படை காவலர்கள்,சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், கொலையாளி தனிநபராகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். பின், வசந்தியின் குடும்ப உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவர் பழனியின் உடன்பிறந்த சகோதரர் பாலமுருகனுக்கும் வசந்திக்கும் நீண்ட காலமாக தகராறு இருந்து வந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் பாலமுருகனை அழைத்து விசாரணை நடத்திய போது, தங்களுக்குள் தகராறு இருந்தது உண்மை தான். ஆனால், எங்களிடம் போதிய அளவு சொத்து இருக்கும் போது, எதற்காக கொலை செய்து, நகையை திருட வேண்டும். மேலும், இது வரை நடந்து வந்த அனைத்து விசாரணைகளுக்கும் தனது முழு ஒத்துழைப்பை தந்துள்ளதாக கூறியுள்ளார்.

பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்ட தனிப்படையினர், பாலமுருகனின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதைக் கண்டறிந்து, அதிரடி விசாரணை நடத்தியதில், பாலமுருகன் வசந்தியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். பாலமுருகனை கைது செய்த தனிப்படை போலீஸார், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது;

‘தங்களது தோட்டத்தில் உள்ள மாமரத்தில் உள்ள மாம்பழங்களை, தனது மனைவியும் வசந்தியும் பறித்து வீட்டின் முன் தனித்தனியே, விற்பனை செய்து வந்தனர். அப்போது,
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரச்சினை அதிகமானதாக எனது மனைவி என்னிடம் கூறவே, ஆத்திரத்தில் மின்சார டிராஸ்பார்மர் மாற்ற பயன்படுத்தும் சுத்தி போன்ற இரும்புக் கம்பியில், வசந்தியை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காகவே, நகை திருட்டால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என, வழக்கை திசை திருப்ப எண்ணி அவரது நகைகளை திருடினேன். மேலும், தன் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழாமல் இருக்கவே, விசாரணையின் போது அவர்களுடனே இருந்த்தாக கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து திருடப்பட்ட 15 சவரன் நகை மற்றும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மாம்பழ வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில், பெண் கொலை செய்யப்பட்டு, நகை திருட்டால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாடகமாடி காவல்துறையின் விசாரணையை திசை திருப்ப முயன்ற சம்பவம்… கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர்கள்

ராம் & கோகுலன்