Sun. Mar 8th, 2026

காவல் நிலையத்தின் மேற்கூரைகள் உடைந்து விழும் அபாயம் |

ஜூன், 10-2019..,

சென்னை, அண்ணா நகரில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு முதல் தளத்தில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையமும்… இரண்டாவது தளத்தில் அண்ணாநகர் டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் அடிக்கடி மேற்கூரையின் சிமெண்ட் உடைந்து… அங்கு பணியில் இருக்கும் போலீசார் மற்றும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் தலையின்மேல் விழுவதால் அவர்கள் காயம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மேற்கூரைகள் சிமெண்ட் உடைந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு உள்ளது.

இதனால் போலீஸ் நிலையத்திற்குள் அமர்ந்து பணிபுரிய போக்குவரத்து போலீசார் மிகவும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். மேற்கூரை சிமெண்ட் எப்போது விழும் என்ற அச்சத்தில் பயந்து பயந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை அது சரி செய்யப்படவில்லையாம்.

குறிப்பாக இந்த போலீஸ் நிலையம் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற போலீஸ் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற போலீஸ் நிலையத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடப்பது அங்கு பணிபுரியும் போலீசாரும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் பயத்துடனே வருகின்றனர்.
போலீஸ் நிலையத்திற்கு வெளியே அதிக செலவு செய்து முன்னுரிமை கொடுத்து அழகுபடுத்தும் அதிகாரிகள்… போலீசார் பணி புரியும் அறைக்குள் வந்து விழும் சிமெண்ட் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுவரை பலமுறை மேற்கூரையின் சிமெண்ட் உடைந்து விழுந்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த சிமெண்ட் தளம் சரி செய்யப்படவில்லை என்பது பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் போக்குவரத்து போலீசாருக்கு கழிவறை இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்…