Sun. Mar 8th, 2026

விளையாடும் பொழுது தொட்டில் சேலையில் சிக்கி… கழுத்து நெறித்து சிறுமி பலி.

மே, 18-2019…,

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி (11) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.

இவர், பெரம்பூர் இரயில்வே ஸ்டேசனில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் அவரது மாமா வினோத்குமார் என்பவரின் வீட்டிற்கு கோடை விடுமுறையை கொண்டாட அவரது பாட்டி ரமாவுடன் வந்துள்ளார்.

வினோத்திற்கு ஜானகி என்ற மனைவியும், யஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். யஷ்வந்திற்கு தொடர் காய்ச்சல் காரணமாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருடன் தாய் ஜானகி உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் சிறுமி அஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வினோத்குமார் என்பவர் மதிய அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்ததாகவும் கதவை தட்டிப் பார்த்தும் யாரும் திறக்காத காரணத்தினால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது சிறுமி தொட்டில் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கப்பட்டு அசைவற்ற நிலையில் இருந்துள்ளார். உடனே அங்கிருந்த தண்ணீரை சிறுமியின் மேலே ஊற்றிய போதும் சிறுமி அசைவற்ற நிலையில் இருந்ததால் வீட்டின் கதவை உதைத்து உள்ளே சென்று சிறுமியை தொட்டிலில் இருந்து விடுவித்து வினோத் குமாருக்கு தொலைபேசியின் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

வினோத்குமார் வந்தவுடன் சிறுமியை மீட்டு இரு சக்கர வாகனத்தில் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளித்த போது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த ஜ.சி.எப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் முதற்கட்ட விசாரணையில் விளையாடும் போது தொட்டில் சேலை கழுத்தில் சுற்றி சிறுமியின் கழுத்து நெறிந்து உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது…

நமது நிருபர்