Sat. Mar 7th, 2026

அகத்திய பரம்பரையில் 9 வது முனிவராக தோன்றியவர் | ஸ்ரீ சற்குரு நாத மாமுனி |

ஸ்ரீ சத்குரு ராஜயோக திருமடம்
ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் அகத்திய பரம்பரையில் ஒன்பதாவது முனிவராக தோன்றியவர்.

இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நடுவப்பட்டி யில் பிறந்தவர். அஷ்டாங்க யோகங்களில் சித்தி பெற்று 10 இடங்களில் பூமிக்குள் 48 நாட்கள் இருந்து தவம் இயற்றி உள்ளார்.

பொதிகை மலை, பழனி மலை, சுருளிமலை, வெள்ளியங்கிரி, நீலகிரி முதலிய மலைப்பகுதிகளில் கடும் தவம் புரிந்தவர் .

இவர் பூமிக்குள் தவமியற்றிய இடங்களில் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமடம் ஆகும்.

இத்திருமடம் நடுவில் எண்கோண வடிவில் பத்தடி ஆழம் கொண்ட உள்ள குகை உண்டு.

104 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சற்குரு நாத மகா முனிவர் இக்குகையில் அமர்ந்து மூடு பாறையினால் மூடி 48 நாட்கள் நிர்விகல்ப சமாதி தவமியற்றி எழுந்தருளியுள்ளார்.

இத்தகைய தவ வலிமை உடைய ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் திருமடத்தின் முன்பு முழுமுதற் கடவுளாகிய அருள்மிகு சித்தி விநாயகர் பெருமானை எழுந்தருளச் செய்துள்ளார்கள்.

திருமடம் ஆனது ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரால் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே இடமாகும்.

ஸ்ரீ சற்குரு நாத அஷ்டாங்க யோகத்தின் மூலம் அஷ்டமாசித்தி பெற்றிருந்தும் சித்துக்களை கற்பனையே என்று கூறியுள்ளார்.

பக்தர்களுக்கு பக்தியே சிறந்தது என்றும் பக்தியின் மூலமே அத்வைத நிலையை அடைய முடியும் எனவும் உபதேசித்து உள்ளார்கள்.

சைவ வழி நெறிநின்று சரியை கிரியை யோகம் ஞானம் முதலிய படிகளில் சாதனை புரிய உபதேசித்து உள்ளார்கள்.

ஒவ்வொரு திங்களில் திருவோணம் அவிட்டம் நட்சத்திரங்களில் ஜெபம் தவம் செய்ய உத்தேசித்துள்ளார்கள். இவர் ஜாதி ,மத, மொழி, இன வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் கொள்கை கொண்டவர்.

திருவானைக்கோவில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர் .அதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ,வைகாசி திங்கள் திருவோண நட்சத்திரத்தில் மகா குருபூஜை முதல் நாள் ஸ்ரீ சற்குரு நாதர் மலர் அலங்காரத்துடன் திருவானைக்காவில் கோவிலைச் சுற்றி திருவீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

ஏழை மக்கள் இடத்தில் மிகுந்த கருணை கொண்டிருந்தார் 1913 ஆம் ஆண்டிலேயே குருபூசை விழாக்களை நடத்தி சமபந்தி விருந்து உண்ண செய்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்களால் ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ சற்குரு நாதர் சிலகாலம் திருவானைக்காவலில் உள்ள திருமடத்தில் இருந்துவிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு எழுந்தருளி பவானி ஆறு உற்பத்தியாகும் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாது ஏழு நாள் இரவு பகல் தவமியற்றி பிறகு திருக்காந்தல் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மடத்திற்குச் சென்று மகா சீடராகிய ஏகாம்பரர் சுவாமிகளை சந்தித்து விட்டு உதகை அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சிலகாலம் தங்கியிருந்தார்.

அப்போது நீலகிரி மாவட்ட மக்களுக்கும் நகர மக்களுக்கும் சாதி, சமய ,மொழி, இன வேறுபாடின்றி சமபந்தி விருந்து அளித்து வருவதுடன் ஆச்சாரங்களை போதித்து கல்வியறிவை கற்பிக்கவும் செய்து குரு உபதேசம் பெற்று பக்தி கர்ம யோக ஞான சாதனைகளை செய்து பிறவிப்பயன் அடைய உபதேசம் செய்துள்ளார்கள்.

பிறகு தன் பிரதான சீடர்களுடன் அகஸ்திய தவம் புரிந்த பொதிகை மலை சென்று அவன் திரும்பி வருவான் என்று சொல்லி தனது திருமேனியோடு அந்தரத் தியானமாய் மறைந்து விட்டார்கள் என கூறப்படுகிறது

திருச்சியில் சாதுக்களும் யோக சாதகர்களும் பொதுமக்களும் ஸ்ரீ சத்குரு ராஜயோக திருமடத்திற்கு வந்து வணங்கி தியானம் செய்து வருவது காலம்தொட்டே நடந்து வருகிறது.